Wednesday, October 04, 2006

ஒலிபரப்புப் பணியில் இது ஒரு மைல்கல்!

நி ஹாவ் ( வணக்கம் )

சீன வானொலி தனது 65வது ஆண்டு நிறைவைப்


பூரிப்போடு எதிர்வரும் டிசம்பர் திங்களில் கொண்டாட

இருப்பதை எண்ணி பெருமகிழ்வெய்துகிறேன்.

சீன வானொலியின் ஒலிபரப்புப் பணியில்

இது ஒரு மைல்கல்!

அதன் துவக்க நாள் முதல் முதல் இன்றுவரை

அதன் சாதனைகளைப் பட்டியலிடவேண்டும்

என்றால் அதை இந்த ஐந்து பக்கங்களுக்குள்

அடக்கிவிட முடியாது! நாற்பதுக்கும் மேற்பட்ட

அந்நிய மொழிகளில் இணையதளங்களை

துவக்கிவைத்து இன்றைய அசுரவேகத்துக்கு

இணையாக தம்மை வளர்த்துக்கொண்டுள்ள

சீன வானொலி எனது வாழ்க்கையில் வானொலிகள்

பலவற்றுக்குள் வலம்வரக் காரணமாயிருந்ததை

என்னால் மறக்க இயலாது.

இந்தவகையில் எனது எண்ண அதிர்வுகளை, எனது

மலரும் நினைவுகளை சீன வானொலியின் 65வது

ஆண்டு நிறைவுச் சிறப்புமலரில் பகிர்ந்துகொள்ள

வாய்ப்புக் கிடைத்ததைப் பெரும்பேறாகக் கருதுகிறேன்!

அன்று முதல் இன்றுவரை......!


அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாள்!

ஒரு பொன் பொழுதில் இலங்கை வானொலி

இசைத் தேனில் விழுந்த வண்டாய் மயங்கிக் கிடந்த

என்னை என் தாயின் அழைப்பு என்னை மயக்கத்திலிருந்து

விடுவித்தது!

என்னைப் பார்க்க அருகிலிருந்த ஊரிலிருந்து

வந்திருந்த எனது நண்பன் , என் தாயாருக்குப் பின்னால்

நிற்க, வானொலி ஒலியளவைக் குறைத்து வரவேற்றேன்.

அந்த நண்பன் தான் சீன வானொலித் தகவலைச் சொல்லி

கேட்டுப்பார்க்குமாறு கூறிச் சென்றான்.

எண்பதுகளின் இறுதியில் அப்படிக் கேட்கத் துவங்கிய சீன

வானொலி இன்றளவும் தொடர்கிறது.

என்ன ஒரு வித்தியாசம் அன்றைக்கு ஒருமுறைகேட்கத்

தவறிவிட்டால் அடடே இன்று கேட்க முடியாமல் போய்விட்டதே

என்று இருக்கும்! இன்றோ இணையத்தில் அந்தக்

கவலை இல்லாமல் நினைத்த நேரத்தில் நினைத்தபடி

கேட்க முடிகிறது! அறிவியல் நிகழ்ச்சிகளை திரும்பத்

திரும்பகேட்டு அதில் திளைக்க முடிகிறது!!

என் மனப்புல்வெளி மைதானத்தில் அந்த

நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கும்போது

அழகழாய் பல வண்ண ரோஜாப்பூக்கள் பூத்து சிந்தை

சிலிர்த்துப் போகிறது! அந்திவானம் சிவக்கும்போது

ஒரு இனம் புரியாத இன்பப் பொழுது மனசுக்குள்

பிரசவிக்குமே அத்தகைய அற்புதமான பொழுதுகள்

சீன வானொலி கேட்ட தருணங்கள்!

இன்று போல அன்று தகவல் தொடர்புச் சாதனங்கள்


கைகளுக்குள் சிக்காத மனத்தைச் சிறைப்படுத்தி

வைத்த நாட்கள்! வானொலியில் என் குரல் ஒலிக்க

வேண்டும்!

எப்படி ஒலிக்க வைப்பது? என் சிந்தனைச் சிறகுகள்

படபடத்துக்கொள்ளும்; இயலாமை வெளிப்படுத்தும்

உணர்வுத் தீ நாக்குகள் கக்கும் வெப்பத்தின் சிதறல்களில்

என்னைக் கருக்கிக்கொண்ட நாட்களும் உண்டு!

சீன வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் செவிமடுத்ததன்


விளைவு மதுரை, சென்னை அகில இந்திய வானொலியில்,

அமெரிக்க, கனடா வானொலிகளில் பின்னாளில் நிகழ்ச்சிகள்

படைக்க உந்துசக்தியாக இருந்தது என்றால் மிகையில்லை!

சீன வானொலி செய்திகள், செய்திதொகுப்பு, அறிவியல்

செய்திகள், தமிழ் மூலம் சீனம், வெளிநாட்டுச் செய்திகள்

என்று பல்வேறு செய்திகள் மிகவும் பயனுள்ளவாறு

உள்ளதால் தவறவிடாமல் கேட்க வேண்டும் என்ற

உந்துதல் ஏற்பட்டுவிட்டது. அதிலும் இணையத்தில் நேரம்

கிடைக்கும் போது அந்தவாரத்தின் எந்த நாள் செய்திகளையும்

கேட்க முடியும் என்று ஆகிவிட்ட நிலையில் மனம்

மத்தாப்பூவாய் மலர்கிறது.


விருந்தோம்பலில் சீன வானொலி.....!

சீன உணவரங்கம் பகுதியில் இப்போதெல்லாம்


சீனப் பாரம்பரிய உணவுத் தயாரிப்புமுறைகளை

ராஜாவும் கலை அவர்களும் சொல்லும்போதே நாவில்

நீர் ஊற்றெடுத்து விடுகிறது! சில சத்தான உணவு

முறைகளை அப்படியே அச்செடுத்து பைண்ட் செய்து

வைத்துள்ளேன்.

அவ்வபோது சிலவற்றைச் செய்து சாப்பிடும்போதும்

வாயார சீன உணவரங்கத்தை வாழ்த்திக்கொள்வது

உண்டு! ஒரு சமயம் விருந்தினர் வந்திருந்தபோது

வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று வெள்ளரிக்

கோழியும், வெங்காய வடையும் செய்து

அசத்தினோம்!

நம்ம ஊர்ல இப்படிச் செய்வதில்லையே என்று விருந்தினர்

விடைபெறும்போது ஞாபகமாக செய்முறைக் குறிப்பைக் கேட்டு

வாங்கிப்போனார்கள். இது சீன உணவரங்கத்துக்கு கிடைத்த

வெகுமதி என்றே சொல்ல வேண்டும்! விருந்தோம்பலுக்குக்

கூட சீன உணவரங்கம் கைகொடுக்கிறதே!

தமிழ் ஆர்வல அலுவலர்கள்...!

தமிழர்களே தம் பெயரை அழகுதமிழிலிருந்து


வேற்றுமொழி மோகம் கொண்டு பெயர்களை

மாற்றிவைத்துக்கொள்ளும் கொடுமைகளை எண்ணி

நெஞ்சு பொறுக்காமல் குமுறிக்கொண்டிருக்கும்

வேளையில், தங்களின் சீனப் பெயர்களைத் துறந்து

தங்கள் பெயர்களை கலையரசி, கலைமகள், வாணி,

விஜயலட்சுமி என்று தமிழ் பெயர்களைச் சூடி சீனத்

தமிழ் வானொலிப் பிரிவில் வலம் வருவோரை

எண்ணும்போது இப்படிப்பட்ட தமிழ் ஆர்வலர்களை

அலுவலர்களாய் பெற்றுள்ள சீனத் தமிழ் வானொலி

பல சிறப்புகள் பெற்றுத் திகழ மனம் இதயசுத்தியோடு

வாழ்த்துப்பூக்களை வாரி இறைத்து வாழ்த்துகிறது!


சிந்தைக்கு விருந்து....!

சீன வானொலியைச் சொல்லுகிற அதே நேரத்தில்

சீன வானொலியின் இணையதளத்தையும் குறித்து

இங்கே நினைவு கூர்வது மிகப் பொருத்தமாய்

இருக்கும். செய்திகள், கட்டுரைகள், மக்கள் சீனம்,

தமிழ் மூலம் சீனம், பண்பாடும் கதையும், சமூக

வாழ்வு,அறிவியல் உலகம், இன்பப் பயணம், நலவாழ்வுப்

பாதுகாப்பு, சீனத் தேசிய இனக்குடும்பம், விளையாட்டுச்

செய்திகள், சீன உணவரங்கம் என்றும் இசைப்பகுதியில்

சீனபாடல்கள், நேயர் விருப்பப் பாடல்கள் என்று

அமர்க்களமான படங்களோடு கண்ணுக்கும் சிந்தைக்கும் விருந்து படைக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை பாராட்ட வார்த்தைகளில்லை!

இனி சீன வானொலி மூலம் எனக்குள் ஏற்பட்ட எண்ண அதிர்வுகளைச் சிறிது பகிர்ந்து கொள்ள ஆசை மெல்லமெல்ல மென்பூகம்பமாய் என்னுள்ளத்தில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. அதை இங்கே பகிர்ந்து கொள்வது நான் சீன வானொலி மூலம் கற்றதும் பெற்றதும் என்ற அளவில் பகிர்ந்துகொள்கிறேன்.

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற கனியன் பூங்குன்றனார் கவிக்கருத்துச் சிதறல்
எனது இரத்த நாளங்களில் இதமாய் பயணம் செய்து இனிய சிந்தனைகளைத்
தூவுகிறது!

சீனா வல்லரசாக....!

ஒரு நாட்டின் மக்கள் தொகை சமச்சீரான விகிதத்தில் இருந்தால்தான், அந்நாடு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டிருப்பதாக கருத முடியும். ஒரு நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில்
15 வயதுக்குட்பட்டோர் 30 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. அதே போல், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 15 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. அப்போது
மீதமுள்ள 55 சதவீத மக்களில் பெரும்பாலானோர் 30 40 வயதுக்குள் இருப் பார்கள். இவர்களிடம்தான் நாட்டை முன்னேற்றக்
கூடிய வலிமையும் திறமையும் இருக்கும். இது போன்ற, சமச்சீரான மக்கள் தொகையை அமெரிக்கா
1970லேயே கொண்டிருந்தது. சீனா 1990ல் கொண்டிருந்தது. இது குறைந்தபட்சம் 2050ம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் மக்கள் தொகை புள்ளிவிபர நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

2025ம் ஆண்டுக்கு பிறகு, உலக நாடுகளிலேயே முன்னேறுவதற்கான அருமையான மனித ஆற்றலை
கொண்டிருக்கும் நாடுகளில் சீனா முன்னணியில் இருக்கும். அப்போது சீனா வல்லரசாவதற்கான
வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன, என்பதை எவரும் மறுக்கவியலாது!
சீனா வல்லரசாக மாறுகின்றநாள்
வெகுதொலைவில் இல்லை!

இந்திய-சீன உறவு.....!


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பழைமை வாய்ந்த கலாசார உறவுகள் இருந்து வந்தன. இதற்கு அடையாளமாக இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் பரவிய புத்த மதமும் சீனத்திலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த யுவான் சுவாங், பாஹியான் போன்ற யாத்ரீகர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர தொடர்புகள் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளும் ஏராளம் உள்ளன.

இந்திய விடுதலைக்குப் பிறகும் நல்லுறவே நீடித்தது. ஆனால் 1962-ல் ஏற்பட்ட போர் இரு நாடுகளுக்கிடையே இருந்து வந்த இணக்கமான சூழ்நிலையைக் குலைத்து இரு நாடுகளையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிட்டது. எல்லைப் புறத்தில் ராணுவக் குவிப்பு போன்ற பதற்றச் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பரஸ்பரம் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து, சுமுக நிலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளன.

2003-ம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், அவரின் சீன விஜயத்தின்
போது, இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினைகளைத் தீர்க்க, சிறப்புப்
பிரதிநிதிகளை நியமித்து பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவாயிற்று. அதன்
தொடர்ச்சியாக சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது
எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை பெய்ஜிங் நகரில் நடைபெற்றது. இந்தியாவின்
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சீன துணை வெளியுறவு
அமைச்சர் தை பிரிங்கோ ஆகியோர் இப் பேச்சுவார்த்தையில் பங்கேற்று சற்று
முன்னேற்றம் கண்டுள்ளது! பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அடித்தளத்தை
உருவாக்க இப்பேச்சுவார்த்தை உதவிகரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் எல்லையைச் சுற்றி 14 நாடுகள் உள்ளன.

தற்போது ஆசியாவில் இந்தியாவும் சீனாவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி
வரும் நிலையில் இரு நாடுகளுக்கிடையே உள்ள எல்லைப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டால் அது இரு தரப்புப் பொருளாதார உறவுகள் மேலும் வலுவடைய உதவும் என்பதில் ஐயமில்லை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பரஸ்பர வர்த்தகம் இந்த ஆண்டின் இறுதிக்குள் 20 பில்லியன் டாலரை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில்
அமெரிக்காவையும் விஞ்சி, இந்தியாவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா வந்துவிடும்.

வாய்ப்பு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே கலாசார உறவுகளை மேம்படுத்தும் பணிகளும்
நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டை நட்புறவு ஆண்டாக இந்தியாவும்
சீனாவும் அனுசரித்து வருகின்றன. அதற்காக, திரைப்பட விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 44 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நாதுலா கணவாய், சீனாவுக்கும் இந்தியாவுக்கும்
இடையேயான வர்த்தகத்துக்காக ஜூலை 6-ம் தேதி திறக்கப்படுவது சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த நிகழ்வாகும். இதனால் எல்லைப் புறத்தில் வர்த்தகத்துக்கு வழி திறந்து விடப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதியில் சீன அதிபர் இந்தியா வர உள்ளார். அதையடுத்து இந்தியப் பிரதமர்
சீனாவுக்குச் செல்லவிருக்கிறார். இவைபோன்ற அரசுமுறைப் பயணங்கள் இரு நாடுகளுக்கும்
இடையே நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உறுதி.

தகவல்தொடர்பில்.....

அன்று ஆபிரகாம் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி இங்கிலாந்தை
அடைய ஏழுநாட்கள் பிடித்ததாம்; ஆனால் இன்றைக்கோ
தொழில்நுட்பம்..... இணையம் என்ற இமயத்தின் தோளில் அமர்ந்துகொண்டு
உலகின் இடைவெளியைச் சுருக்கி, தொலைவைத் தொலைத்து நொடியில் தகவல்
பரிமாற்றத்திலிருந்து, தேவைப்படும் புள்ளிவிபரங்களைக் கண்மூடிக் கண் திறப்பதற்குள்
கொணர்ந்து நம் கண் முன் கொட்டுகிறது தேடுபொறிகள்!


இன்றைக்கு இணைய வானில் ஊடகங்கள் அளப்பரிய சேவையினை
தமிழ்கூறும் நல்லுலகிற்குப் பாலமாக இருந்து உலகின் ஒரு கோடியை
இன்னொரு கோடியுடன் இணைத்து காலவெளிகளின் சுவர்களைக் கரைத்து,
தூரங்களைச்சுருக்கி, தடைகளைத் தகர்த்து சகலரையும் தொடர்புகள் அறுந்து
போகாத நிலையை ஏற்படுத்தியுள்ளதை எவராலும் மறுக்கவியலாது! இணையம் மனித
மனவோட்டங்களை இணைப்பதில் அடைந்துள்ள
வெற்றி மகத்தானது.

விண்டோஸ் மீடியா ப்ளேயரிலும்.....!

இதனை உணர்ந்து சீன வானொலி இணைய வானொலிக்கான இணையதளத்தை 2003ம் ஆண்டு
அறிமுகப்படுத்தி ஒலிபரப்பு மூலம் மட்டுமல்ல இணையம் மூலமும் அரியதகவல்களையும் படங்களையும்
செய்திகளாக, கட்டுரைகளாக வெளியிட்டு செய்தியூடகத்தின் இன்னொரு முகமாக வெளிச்சம்
விரித்து தமிழ் உள்ளங்களை நிறைத்தது! அவ்வப்போது சிறப்பாசிரியராக சிம்மக்குரலோன் திருமிகு.இராஜாராம் அவர்களையும், ஆசிரியராக வாணியையும் கொண்டு வெளிவரும் சீனத் தமிழொலி அச்சு இதழ்கள்
எம் கண்களுக்குள் ஒளிநிலவைப் பிரசவித்தாலும் இணையத்தில் ஏழுநாட்களும் சீனதமிழ் இணைய
வானொலியை கேட்க வகைசெய்துள்ளதற்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும்! இந்த நேரத்தில் ஒரு சின்ன விண்ணப்பத்தையும் சீன வானொலியின் தமிழ் பிரிவின் முன் வைக்க விரும்புகிறேன்! ரியல் ஆடியோ மூலம் தமிழ் ஒலிப்ரப்பைக் கேட்க வகை செய்யப்பட்டுள்ளதை விண்டோஸ் மீடியா ப்ளேயரிலும்
கேட்கும் வகையில் ஆவன செய்தால் நன்றாக இருக்கும்!

நேயர்மன்றங்களுக்கு ஒரு வலைப்பதிவு..!

இந்தியாவில் உள்ள சீன வானொலி நேயர் மன்றங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு வலைப்பதிவை உருவாக்கி அளிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதை இந்த 65ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அதி அற்புதவேளையில் தெரிவிப்பதோடு அவர்களுக்கு தமிழில் அங்கே வலையேற்றுவது எப்படி என்பதையும்
விரும்பினால் கற்றுத்தர தயாராக இருக்கிறேன் என்பதை என் அடிமனத்து ஆழத்திலிருந்து தெரிவிப்பதில்
மிகுந்த மகிழ்வெய்துகிறேன்! ஒவ்வொரு மன்றத்துக்கும் ஒரு வலைபப்திவு இருந்தால் அந்த நேயர் மன்றங்களின் மாதாந்திர செயற்பாடுகள், நிகழ்வுகளை வலையேற்றலாம். சீன வானொலி தமிழ் பிரிவு
நண்பர்கள் இதைப்பார்த்து அறிந்துகொள்ளவும் அவர்களின் கருத்துக்களை அங்கே பதிவதற்கும் இந்த வலைப்பதிவுகள் சீன தமிழ் வானொலிக்கும் நேயர் மன்றத்துக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாய் இருக்கும்! சமீபத்தில் நாமக்கல் நேயர் மன்றத்துக்கு நான் உருவாக்கியளித்த வலைப்பதிவு இது!


http://namakalcri.blogspot.com/

விருப்பமுள்ள நேயர்மன்றங்கள், நேயர் மன்ற உறுப்பினர் பட்டியல், நிர்வாகிகள் விபரம், சமீபத்திய மன்றக்கூட்டம் குறித்த தகவல்கள், மன்றதொடர்புடையை நிகழ்வுகளின் நிழற்படங்கள் போன்றதகவல்களோடு அனுப்பினால் அவர்களூக்கான் வலைப்பதிவை உருவாக்கித் தருகிறேன். என்னைத் தொடர்புகொள்ள வேண்டிய மின்ஞசல் முகவரி:- albertgi@gmail.com. நேயர்கள் இந்த என் முயற்சிக்கு ஒத்துழைத்தால்
விரைவில் ஒவ்வொரு நேயர் மன்றத்துக்கும் ஒரு வலைப்பதிவு வலையுலகில் ஒளிரச் செய்யலாம்


C.S.Albert Fernando ( Memb.#077619)
3604 BAYBERRY Dr
WAUKESHA. WI.53189-6833 USA.

XIE XIE NI)(நன்றி)

No comments: